புலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்


புலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு   மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 26 May 2020 10:46 AM IST (Updated: 26 May 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 827 பேர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் கண்ணன் விருதுநகர் ரெயில் நிலையம் முன்பு இருந்து வேன்களில் 217 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல மதுரை ரெயில் நிலையத்திற்கு வழி அனுப்பி வைத்தார். அவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பத்திரமாக ஊர் சென்று சேருமாறு அறிவுறுத்தினார்.

827 பேர்

இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 827 பேர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்துக்கு 454 தொழிலாளர்களும், உத்தரபிரதேசத்துக்கு 123 பேரும், மணிப்பூருக்கு 9 பேரும், ராஜஸ்தானுக்கு 22 பேரும், மராட்டியம், டெல்லிக்கு தலா ஒருவரும் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி கலெக்டர் கண்ணன் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பட்டாசு மற்றும் கட்டுமான தொழில்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இம்மாவட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் அனைவருமே ஊரடங்கு நேரத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

500 பேர்

இன்னும் சுமார் 500 பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் தற்போது புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை உடனடியாக அங்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இல்லை. அந்த மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் போது அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பட்டாசு, கட்டுமான தொழில் மற்றும் பிற தொழில்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெறும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story