நிவாரண உதவி கேட்கும் மனுக்களை வாங்க மறுக்கும் கிராம அலுவலர்கள் - கலெக்டர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்


நிவாரண உதவி கேட்கும் மனுக்களை வாங்க மறுக்கும் கிராம அலுவலர்கள் - கலெக்டர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்
x
தினத்தந்தி 27 May 2020 4:45 AM IST (Updated: 26 May 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

நிவாரண உதவி கேட்கும் மனுக்களை கிராம அலுவலர்கள் வாங்க மறுப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்க தலைவர் கணபதி, அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், “ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள சலூன் கடைகள் கடந்த 23-ந் தேதி வரை 2 மாதங்களாக திறக்கப்படவில்லை. அதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டனர். முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் நலவாரிய உறுப்பினர்கள், வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக தமிழக அரசு ரூ.2 ஆயிரம் அறிவித்தது.

வேலூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் நிவாரண உதவி பெறுவது தொடர்பான மனுக்களை வேலூர் மாநகராட்சி மண்டல அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுத்தால் பெறுவதில்லை. இது தொடர்பாக தமிழக அரசின் ஆணை இதுவரை வரவில்லை என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்களே மனுக்களை பெற்று வருகின்றனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story