சென்னை-தூத்துக்குடி இடையே 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது
சென்னை-தூத்துக்குடி இடையே 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி வந்த 42 பயணிகளின் கையில் முத்திரை குத்தப்பட்டது. அதில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 2 விமான நிறுவனங்கள் மூலம் 5 விமான சேவைகள் நடைபெற்று வந்தது. மேலும் பெங்களூருவுக்கும் ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பரபரப்பாக இயங்கி வந்தது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டது. 2 மாதங்களாக தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.
மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் உள்நாட்டு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று முன்தினம் சென்னை-தூத்துக்குடி இடையே விமானம் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று சென்னை-தூத்துக்குடி இடையே மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது. காலை 11-05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் மதியம் 12-32 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் மொத்தம் 42 பயணிகள் வந்தனர். அதில் குஜராத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.
‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை
இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்‘ கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். குஜராத்தில் இருந்து வந்த பயணியை மட்டும் தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து சென்றனர். அவருக்கு கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் கையில் அழியாத மை மூலம் முத்திரை குத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த கைக்குழந்தைகள் உள்பட 57 பேருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் பயணிகள் விமானநிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் 1-23 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், நிலைய மேலாளர் ஜெயராமன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இ-பாஸ்
தூத்துக்குடி-சென்னை விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு வந்த பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அறிகுறிகள் இல்லாதவர்கள் வெப்ப பரிசோதனை முடிக்கப்பட்டு கையில் முத்திரையிடப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இ-பாஸ் இல்லாமல் வந்தால், உடனடியாக பாஸ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 31-ந்தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள் விமானம் வருகிறது. அதன்பிறகு வழக்கம்போல் விமானம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு மராட்டியம், குஜராத்தில் இருந்து வந்த 126 பேருக்கும், சென்னையில் இருந்து வந்த 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி
தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறும்போது, ‘தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அதே போன்று கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளும் நடந்து உள்ளன. பயணிகள் இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயணிகளின் பொருட்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது‘ என்று கூறினார். விமானத்தில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், ‘சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்து உள்ளேன். சென்னை விமான நிலையத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. சானிடைசர் உள்ளிட்டவைகளும் தந்தனர். தூத்துக்குடி விமான நிலையத்திலும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது‘ என்றார்.
Related Tags :
Next Story