புதிய மின்சார சட்டத்தை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய மின்சார சட்டத்தை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை,
மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார சட்டத்தால் தமிழக விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சார திட்டத்திற்கு ஆபத்து உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறி மத்திய அரசை கண்டித்து, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், வி.ஆர்.சிவராமன், என்.ரங்கபாஷியம், நாஞ்சில் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், வர்த்தக காங்கிரஸ் தலைவருமான எச்.வசந்தகுமார் எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, செல்வம், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியின் போது விவசாயிகள் கடன் ரூ.72 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. தற்போது, காலம் காலமாக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை கிடையாது என்று சொல்கிறார்கள். இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தான் தமிழகத்துக்கு கிடைக்கும் நிதியை வழங்குவதாக மத்திய அரசு மிரட்டுகிறது. இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் தமிழக அரசு விவசாயிகளுக்கு கிடைக்கும் இலவச மின்சாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.
இது முதல் கட்ட போராட்டம்தான். தமிழக அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய ஒப்புக் கொண்டால் தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று, அண்ணா நகர், சாந்தி காலனியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர் கே.வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story