கர்நாடகத்தில் 1-ந் தேதி முதல் அனைத்து கோர்ட்டுகளும் திறப்பு - புதிய வழிகாட்டுதலை வெளியிட்டார் ஐகோர்ட்டு பதிவாளர்


கர்நாடகத்தில் 1-ந் தேதி முதல் அனைத்து கோர்ட்டுகளும் திறப்பு - புதிய வழிகாட்டுதலை வெளியிட்டார் ஐகோர்ட்டு பதிவாளர்
x
தினத்தந்தி 27 May 2020 12:00 AM GMT (Updated: 26 May 2020 10:27 PM GMT)

கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து கோர்ட்டுகளும் செயல்படும் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு பதிவாளர், புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஐகோர்ட்டு உள்பட அனைத்து கோர்ட்டுகளும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. ஐகோர்ட்டில் சில முக்கியமான வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஐகோர்ட்டு உள்பட அனைத்து கோர்ட்டுகளும் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதிய வழிகாட்டுதலை பதிவாளர் வெளியிட்டுள்ளார். ஐகோர்ட்டு பதிவாளர் ராஜேந்திர பதமிகர் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் ஐகோர்ட்டு உள்பட அனைத்து கோர்ட்டுகளும் செயல்படும். முதல் 2 வாரத்தில் ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் 20 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த காலக்கட்டத்தில் வக்கீல்கள் ஆஜராகாவிட்டால், அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி. 65 வயதுக்கு மேற்பட்ட வக்கீல்கள் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப் படுகிறது. சாட்சிகள் காணொலி காட்சி மூலம் மட்டுமே பதிவு செய்து கொள்ளப்படும். கோர்ட்டு அறையில் அதிகபட்சமாக 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

20 பேருக்கு மேல் ஆஜராகி இருந்தால், விசாரணை ரத்து செய்யப்படும். மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் கோர்ட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் வருகிற 1-ந் தேதி முதல் அதில் 50 சதவீத கோர்ட்டுகள் செயல்பட்டால் போதுமானது. கோர்ட்டுகளில் வழக்கு இல்லை என்றால், ஊழியர்கள் பணிக்கு ஆஜராகி மற்ற நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டும்.

தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது ஐகோர்ட்டு வெளியிடும் வழிகாட்டுதல்களை கோர்ட்டுகள் செயல்படுத்த வேண்டும். சி பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு ஆஜரானால் போதுமானது. அந்த ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும்.

பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கோர்ட்டுகளில் பி, டி பிரிவு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு ஆஜராக வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் கோர்ட்டுகள், காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகளை விசாரிக்க வேண்டும். வழக்குகளை தாக்கல் செய்ய முன் அனுமதி பெற்று வர வேண்டும்.

முக்கிய கோர்ட்டுகளுக்கு வெளியே கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு, வழக்குகள் பெறப்படும். வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதி பெற்றவர்களுக்கு தேதி, நேரம், கவுண்ட்டர் எண் போன்ற அனைத்து விவரங்களும் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். முன் அனுமதி பெற்றதற்கான அனுமதி சீட்டு இருப்பவர்கள் மட்டுமே, வழக்குகளை தாக்கல் செய்ய கோர்ட்டு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வழக்கு தாக்கல் செய்யும் இடத்தில் சமூக விலகலை பின்பற்றுவதை உறுதி செய்ய சட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். வழக்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கோர்ட்டு அறைக்குள் அனுமதி இல்லை. சாட்சி சொல்ல வருபவர்கள் அதற்கான சம்மனை காட்ட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் பிரச்சினை உள்ளவர்கள் கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

கோர்ட்டு வளாகம் மற்றும் அறை ஆகியவை வாரம் ஒரு முறை கிருமிநாசினி திரவம் கொண்டு தூய்மைப்படுத்தப்படும். வருகிற 1-ந் தேதி கோர்ட்டு திறப்பதற்கு முன்பு, முதலில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும். வழக்கு தொடர்பு உடையவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டால் அதுபற்றி பரிசீலிக்க வேண்டும்.

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 164-ன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்வதை காணொலி காட்சி மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க அலுவலகம், உணவகங்கள் திறக்க அனுமதி இல்லை. கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு வக்கீல்கள், சமீபத்தில் தாங்கள் பிற நாட்டுக்கோ, பிற மாநிலங்களுக்கோ, சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கோ, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கோ செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதிகள், ஒரு குழுவை அமைத்து மின்னஞ்சல் மூலம் வழக்குகளை தாக்கல் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோர்ட்டு வளாகத்திற்குள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இது நீதிபதிகளுக்கு பொருந்தாது. நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும்போது முக்கவசம் அணியலாம். வழிகாட்டுதல் சரியாக பின்பற்றாவிட்டால் அத்தகைய கோர்ட்டுகளை உடனே மூட வேண்டும்.” 

இவ்வாறு பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Next Story