ஊட்டியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது


ஊட்டியில்   பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 May 2020 4:16 AM IST (Updated: 27 May 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது.

ஊட்டி,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. வழக்கமாக பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஊரடங்கு உத்தரவால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் இன்று(புதன்கிழமை) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கான்வென்ட் ஆகிய 2 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிமாவட்ட பிளஸ்-2 விடைத்தாள் கட்டுகள் ஊட்டி தலைமை தபால் அலுவலகத்துக்கு வந்தது. பின்னர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் 45 முதன்மை தேர்வாளர்கள், 45 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 270 உதவி தேர்வாளர்கள், 30 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 390 பேர் ஈடுபடுகின்றனர்.

7 சிறப்பு பஸ்கள்

இந்த பணிக்காக எருமாடு, பாட்டவயலில் இருந்து ஆசிரியர்கள் வர தலா 2 அரசு பஸ்கள், கோத்தகிரி, குன்னூர், மஞ்சூரில் இருந்து ஊட்டிக்கு தலா ஒரு பஸ் என மொத்தம் 7 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் சமூக இடைவெளி விட்டு நாற்காலிகள், மேஜைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று விடைத்தாள் திருத்தும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மற்றும் கை கழுவும் திரவம் வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு வகுப்பறைக்கு ஒரு முதன்மை தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவித் தேர்வாளர்கள் என 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர் கண்காணிப்பு

மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story