ஆயுஸ் டாக்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்; சம்பள உயர்வு குறித்த மந்திரி ஸ்ரீராமுலுவின் உறுதியை ஏற்றனர்
சம்பளத்தை உயர்த்துவதாக மந்திரி ஸ்ரீராமுலு உறுதி அளித்ததை அடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆயுஸ் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
பெங்களூரு,
சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆயுஸ் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆயுஸ் டாக்டர்கள் சங்க நிர்வாகிகளை சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நேற்று நேரில் வரவழைத்து பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.
ஆங்கில மருத்துவர்களுக்கு வழங்குவது போல் தங்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மந்திரி ஸ்ரீராமுலு, அலோபதி டாக்டர்களுக்கு வழங்கியது போல், ஆயுஸ் டாக்டர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் ஸ்ரீராமுலு பேசியதாவது:-
“அலோபதி டாக்டர்களுக்கு வழங்கியதுபோல் ஆயுஸ் டாக்டர்களின் சம்பளமும் உயர்த்தப்படும். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். சிறப்பு நியமனம் மூலம் 2,000 எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்களை நியமனம் செய்ய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதேபோல் ஆயுஸ் டாக்டர்களையும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால் ஆயுஸ் டாக்டர்கள் உடனடியாக தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும். ஆயுஸ் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் அதிகரிக்கப்படும். இதற்கு உடனடியாக நிதித்துறையின் ஒப்புதல் பெறப்படும்.”
இவ்வாறு ஸ்ரீராமுலு பேசினார்.
மந்திரி ஸ்ரீராமுலு அளித்த இந்த வாக்குறுதியை ஏற்று காலவரையற்ற போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவதாக ஆயுஸ் டாக்டர் கள் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story