அறுவடை பணிகள் தீவிரம்: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் அவதி


அறுவடை பணிகள் தீவிரம்: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 27 May 2020 4:31 AM IST (Updated: 27 May 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

நாஞ்சிக்கோட்டை அருகே கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

நாஞ்சிக்கோட்டை,

நாஞ்சிக்கோட்டை அருகே கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோடை நெல் சாகுபடி

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள மருங்குளம், ஈச்சங்கோட்டை, கருக்காடிப்பட்டி, மின்னாத்தூர், பஞ்சநதிக்கோட்டை, நெல்லுப்பட்டு, கொல்லாங்கரை, பாச்சூர், செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை, வடக்கூர், தெக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு வசதி கொண்ட விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்து இருந்தனர்.

தற்போது இந்த கிராமங்களில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கருக்கு 30 மூட்டைகள் முதல் 40 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கேட்பதால் விவசாயிகள் நெல்லினை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஈரப்பதம்

ஆனால் கொள்முதல் நிலையங்களில் தினசரி குறிப்பிட்ட அளவு நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அறுவடையாகும் நெல்லினை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். கொள்முதல் நிலையத்துக்கு நெல்லினை விற்பதற்கு ஏற்ற வகையில் நெல்லை காய வைப்பதற்கான இட வசதியும் இல்லாததால் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

கிராமங்களில் நெல்லினை மூடி வைப்பதற்கு தார்ப்பாய் வசதி இல்லாததால், கால்நடைகள் நெல்லினை தின்று சேதம் விளைவிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நாஞ்சிக்கோட்டை அருகே சோழபுரம், ஆதனக்கோட்டை, செல்லம்பட்டி, பாச்சூர், பொய்யுண்டார்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே நெல் மூட்டைகளை தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story