பக்தர்களின் வழிபாட்டுக்காக கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
பக்தர்களின் வழிபாட்டுக்காக கோவில்களை திறக்கக்கோரி வாணியம்பாடியில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்துக் கோவில்களும், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. பக்தர்களின் வழிபாட்டுக்காக கோவில்களை திறக்கக் கோரி கோட்ட லம்போதிரகணபதி கோவில் எதிரே இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விட்டல், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் இந்து முன்னணியினர் 10 பேர் தோப்புக் கரணம் போட்டு நூதன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், டவுன் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.
கோவில்களை திறந்து பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, இந்து முன்னணி சார்பில், அதன் நிர்வாகிகள் ஆம்பூர் நாகநாதசாமி கோவில், பெரிய ஆஞ்சநேயர் கோவில், சான்றோர்குப்பம் சுந்தரவிநாயகர் கோவில், துத்திப்பட்டு பிந்துமாதவர் கோவில், சோமலாபுரம் ஊராட்சி வீரவர் கோவில் பகுதி திரவுபதியம்மன் கோவில் ஆகியவற்றின் முன்பு தோப்புக் கரணம் போட்டு போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி ஆம்பூர் டவுன், கிராமியம், உமராபாத் ஆகிய போலீஸ் நிலையங்களில் மனு கொடுத்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக போலீார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஊரடங்கை மீறி ஆம்பூர் அருகே வீரவர் கோவில் பகுதி திரவுபதியம்மன் கோவில், துத்திப்பட்டு பிந்துமாதவர் கோவில் ஆகியவற்றின் எதிரே இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முன்னதாக, அங்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து இந்து முன்னணியினரை போராட்டத்தில் ஈடுபட விடாமல் தடுத்து நிறுத்தி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story