மகன் திருமணத்தின் போது கொரோனாவுக்கு பலியான வியாபாரி உடல் நாகர்கோவிலில் எரிப்பு
கூடங்குளத்தில் மகன் திருமணத்தின் போது கொரோனா பாதிப்புடன் மயங்கி விழுந்து இறந்த வியாபாரியின் உடல் நாகர்கோவிலில் எரிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
கூடங்குளத்தில் மகன் திருமணத்தின் போது கொரோனா பாதிப்புடன் மயங்கி விழுந்து இறந்த வியாபாரியின் உடல் நாகர்கோவிலில் எரிக்கப்பட்டது.
வியாபாரி திடீர் சாவு
சென்னை மணலியைச் சேர்ந்தவர் 63 வயது முதியவர். இவருடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கூடங்குளம். இவர் சென்னையில் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மகனின் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடங்குளத்தில் நடந்தது. இந்த திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே திருமணத்துக்கு வந்தவர்கள் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகனின் திருமணம் நடந்த சிறிது நேரத்தில் தந்தை இறந்த சம்பவம் திருமண வீட்டில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் 8 பேருக்கு பரிசோதனை
பின்னர் அவருடைய உடலை கூடங்குளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடலை பிணவறைக்கு கொண்டு செல்வதற்கு முன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் முதியவரின் உடலுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் உள்பட 8 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் 8 பேரும் ஆஸ்பத்திரியின் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்மதம்
இந்த நிலையில் முதியவர் கொரோனாவின் காரணமாக திடீரென மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை பாதுகாப்பான முறையில் கருப்புநிற உறைக்குள் பொதிந்து வைத்திருந்தனர். மேலும் அவர் உடலை ஊருக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்றும், நாகர்கோவிலில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்திலேயே எரித்தால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வியாபாரியின் உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அதற்கு அவருடைய உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து உடலை நாகர்கோவிலை அடுத்த புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்தில் எரியூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி வியாபாரியின் உடல் அமரர் ஊர்தி மூலம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்து பாதுகாப்பாக புளியடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உடல் எரிப்பு
ஆம்புலன்சில் இருந்து உடலை இறக்கிய தொழிலாளர்களும், பிணத்தை எரிவாயு மூலம் எரியூட்டும் மாநகராட்சி பணியாளர்களும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருந்தனர். பின்னர் அவர்கள் அந்த உடலை எரிவாயு தகன மேடையில் வைத்து எரித்தனர். முன்னதாக புளியடி எரிவாயு தகன மையத்துக்குச் சென்றதும் ஆம்புலன்ஸ் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம்செய்யப்பட்டது.
உடல் பொதியப்பட்டிருந்த உறையின் மீதும், உடலை வைத்து எடுத்துச் சென்ற ஸ்ட்ரெச்சர், தகன மையத்தில் உடல் வைக்கப்படும் சக்கர பலகை ஆகியவற்றின் மீதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். எரிப்பதற்கு முன்பும், எரித்த பின்னரும் பணியாளர்கள் மீது கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story