தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவிலியர் உள்பட 5 பேருக்கு கொரோனா


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவிலியர் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 May 2020 2:41 AM GMT (Updated: 27 May 2020 2:41 AM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்னை சென்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த 52 வயது கால்டாக்சி டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 21-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரான 64 வயது முதியவருக்கு ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. முடிவில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரிய வந்தது.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் 32 வயதுடைய பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். நாகர்கோவில் சென்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 23-ந் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த 45 வயது லாரி டிரைவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர் ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ வந்த அவர் அவ்வை நகர் 3-வது தெருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கும் நேற்று முன் தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜெர்த்தலாவ் ஊராட்சிக்குட்பட்ட எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபரும், காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி ஊராட்சி வெள்ளையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 26 வயது வாலிபரும் பெங்களூருவில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அண்மையில் பெங்களூருவில் இருந்து தங்கள் ஊருக்கு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் அவர்கள் 2 பேரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 2 பேரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Next Story