ஊரடங்கு தளர்வால் வேலை தொடங்கியது: கல் செக்கில் எண்ணெய் தயாரிக்கும் தொழில் மந்தம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ஊரடங்கு தளர்வால் வேலை தொடங்கினாலும் கல் செக்கில் எண்ணெய் தயாரிக்கும் தொழில் மந்தமாக இருப்பதாகவும், எனவே, அரசு நிவாரணம் வழங்கி இத்தொழிலை ஊக்கப் படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
நெல்லை,
ஊரடங்கு தளர்வால் வேலை தொடங்கினாலும் கல் செக்கில் எண்ணெய் தயாரிக்கும் தொழில் மந்தமாக இருப்பதாகவும், எனவே, அரசு நிவாரணம் வழங்கி இத்தொழிலை ஊக்கப் படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
கல் செக்கு
பண்டைய காலத்தில் மக்கள் சமையலுக்கு பயன்படுத்திய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய், மருத்துவத்திற்கு பயன்படுத்திய வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்டவற்றை கல் செக்கில் 2 மாடுகளை பூட்டி அரைத்து எடுப்பார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பேட்டை, சுத்தமல்லி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் கல் செக்கில் எண்ணெய் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இதனால் பேட்டையில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்திற்கு பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் என்றே பெயர் உள்ளது. கல் செக்கு மூலம் எடுக்கும் எண்ணெய் கலப்படம் இல்லாமல் சுத்தமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் என்பதால் மக்கள் அதிக அளவில் இதை விரும்பி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர்.
புத்துயிர் பெற்றது
பின்னர் தேவை அதிகரித்ததால் எந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெயை மக்கள் பயன்படுத்த தொடங்கினார்கள்.
தற்போது மக்கள் இயற்கை உணவை தேடி வருகிறார்கள். இதனால் கல் செக்கு எண்ணெய் மற்றும் இயற்கை முறையில் ரசாயன உரம் இல்லாமல் இயற்கை உரங்கள் மூலம் விளைவித்த உணவு பொருட்களுக்கு மரியாதை கிடைத்தது. இதன் காரணமாக மீண்டும் கல் செக்கில் மாட்டை பூட்டி எண்ணெய் தயாரிக்கும் தொழில் புத்துயிர் பெற்றது.
கொரோனா ஊரடங்கு
நெல்லை பேட்டையை சேர்ந்த சிவ செண்பகம் என்பவர், நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு வயல் வெளியில் கல் செக்கு வைத்துள்ளார். 2 மாடுகளை அதில் பூட்டி கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை அரைத்து எடுத்து விற்பனை செய்து வருகிறார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்ற எண்ணெய் என்பதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து எண்ணெய் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் சிவ செண்பகம், கல் செக்கில் எண்ணெய் தயாரிக்கும் தொழிலை நிறுத்திவிட்டு மாடுகளை சுத்தமல்லியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டார். தொழில் 2 மாதமாக நடைபெறவில்லை. இதனால் மாட்டிற்கு தீவனம் வாங்க முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.
வேலை தொடங்கியது
தற்போது ஊரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியதை தொடர்ந்து மீண்டும் கல் செக்கில் மாடுகளை பூட்டி அதன்மூலம் எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து சிவசெண்பகம் கூறியதாவது:-
என்ஜினீயரான நான், நமது குலத்தொழிலை செய்யவேண்டும் என்று நினைத்து கல் செக்கில் மாடுகளை பூட்டி அதன்மூலம் எண்ணெய் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறேன்.
30 கிலோ எள்ளுடன், 2 கிலோ கருப்புகட்டி சேர்த்து கல் செக்கில் போட்டு மாடுகளை வைத்து அரைத்து எண்ணெய் எடுக்க 3 மணி நேரம் ஆகும். இந்த எண்ணெய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காலையில் எள்ளும், மாலையில் நிலக் கடலை அல்லது தேங்காய் அரைத்து எண்ணெய் எடுப்போம்.
மந்தமாக உள்ளது
தினமும் 6 மணி நேரம் செக்கு ஆட்டப்படும். கொரோனா ஊரடங்கால் எங்கள் தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. 2 மாதமாக தொழில் செய்யவில்லை. தற்போது மீண்டும் தொழிலை தொடங்கி உள்ளோம். இருந்தாலும் மக்கள் முன்பு போல் வந்து எண்ணெய் வாங்க வரவில்லை. தொழில் மந்தமாக தான் உள்ளது. தற்போது ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.410-க்கும், கடலை எண்ணெய் ரூ.280-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நிவாரணம் வழங்கி எங்கள் தொழிலை ஊக்கப்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story