குடும்பத் தகராறில் வாலிபர் அடித்து கொலை சகோதரர்கள் 3 பேர் கைது
காரியாபட்டி அருகே குடும்பத் தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் செந்தில்குமார் தனது மனைவியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து கலைச்செல்வி தனது அண்ணன் கணேசமூர்த்தியிடம் (வயது 25) சென்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் செந்தில்குமாரிடம் சென்று தகராறு செய்தார். அப்போது செந்தில்குமாரின் சகோதரர்கள் ஆனந்தகுமார், செல்வகுமார் ஆகியோர் சேர்ந்து கணேசமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கணேசமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், ஆனந்தகுமார், செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story