நெல்லை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை வாகனம் அறிமுகம்
நெல்லை மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர் கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.
அந்த வகையில் டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வரும் நெல்லையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது ஊர் திரும்பி வருகின்றனர். இதுதவிர வடமாநிலத்தை சேர்ந்த தமிழர்கள் சிறப்பு பஸ், வேன், கார் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பரிசோதனை வாகனம்
நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் வாகன சோதனை சாவடியில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க சாரை, சாரையாக வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் தொழிலாளர்களால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதியிலும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய நெல்லை மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வாகனத்தில் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
கொரோனா வாகனம் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதை நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சியை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, “சமீபத்தில் நெல்லை மாநகர பகுதியிலும் கொரோனா தொற்று பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த பகுதியில் பரிசோதனை செய்வதற்காக இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் வாகன சோதனை சாவடியில் பரிசோதனை செய்யாமல் இருந்தால், அவர்களின் வீட்டுக்கு சென்று சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் நெல்லை வருகிறார்கள். அவர்களை ரெயில் நிலையத்தில் நிறுத்தி இந்த வாகனம் மூலம் பரிசோதனை செய்யப்படும்.
முககவசம்
நெல்லை மாநகராட்சி சார்பில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 வசூலிக்கப்பட்டது. தற்போது ஏராளமானவர்கள் மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வெளியே வருகிறார்கள். இந்த சோதனை தீவிரப்படுத்தப்படும்“ என்றார்.
Related Tags :
Next Story