நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 9:15 AM IST (Updated: 27 May 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

ஏழை விவசாயிகளின் உரிமையை மறுக்கும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

ஏழை விவசாயிகளின் உரிமையை மறுக்கும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரப்பன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு நிறுத்த கூடாது. மின்சாரத்தை தனியாருக்கு விடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

திருச்செங்கோடு சூரியம் பாளையம் தலைமை தபால் நிலையம் முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைத் தலைவர் லோகநாதன், நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் கதிரேசன், வட்டார தலைவர்கள் ராஜலிங்கம், சசிகுமார், தியாகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையிலும், சட்டையம்புதூர் குமரேசபுரம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமகிரிப்பேட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ், நாமகிரிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் கட்சி கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாமகிரிப்பேட்டை வட்டார தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் சவுந்திரராஜன், நாமகிரிப்பேட்டை பேரூர் காங்கிரஸ் தலைவர் இளங்கோ, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட துணை தலைவர் மோகன்தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எருமப்பட்டி வட்டார தலைவர் சுந்தரம், பேரூர் நகர தலைவர் பெருமாள், முன்னாள் நகர தலைவர் பாபு உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

மோகனூரில் தடையை மீறி பேரூராட்சி அலுவலகம் முன்பு மோகனூர் நகர காங்கிரஸ் தலைவர் சிங்காரம் (வயது 70) தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த நகர துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் (52), நகர செயலாளர் ரவி (53), சத்தியமூர்த்தி (65), ராஜ்குமார் (23), சாமிநாதன் (70) ஆகியோர் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்.

சேந்தமங்கலம் அருகே புதன்சந்தை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வட்டார காங்கிரஸ் தலைவர் இளங்கோ (60), தமிழ்நாடு காங்கிரஸ் யூனியன் தலைவர் முருகன் (45), நிர்வாகிகள் சக்திவேல் (38), தர்மலிங்கம் (42) ஆகிய 4 பேர் மீதும் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story