ஊரடங்கை பயனுள்ளதாக்க மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி போலீஸ்காரரின் முயற்சிக்கு பாராட்டு
ஊரடங்கை பயனுள்ளதாக்க 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ்காரர் இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
கமுதி,
கொரோனா ஊரடங்கினால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஆன்லைனில் பாடம், டி.வி., செல்போன் என்று பொழுதை கழித்தாலும் அவர்களால் வீதிகளில் இறங்கியும், மைதானங்களுக்கு சென்றும் விளையாட முடியாத நிலையே உள்ளது. பூங்காக்களும் அடைக்கப்பட்டுள்ளன.
எனவே கிடைக்கின்ற பொழுதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாணவ-மாணவிகள் இலவசமாக சிலம்பம் கற்று வருகின்றனர். அதாவது, 9-ம் வகுப்பிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, தற்காப்பு கலையான 3 மாத சிலம்ப பயிற்சியை, கமுதி அருகே கோட்டைமேட்டில், மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள திறந்தவெளி இடத்தில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி கற்றுக்கொடுத்து வருகிறார்.
பாராட்டு
பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கமுதி, கண்ணார்பட்டி, நந்திசேரி, அபிராமம், கோட்டைமேடு, அய்யனார்குளம், நாராயணபுரம், முத்தாலங்குளம், சம்பகுளம் கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, இலவச சிலம்ப பயிற்சியை வழங்கி வருகிறார். மாணவர்களும், பெற்றோரும் அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமுதி மாணவர் நந்தீஸ் அத்வானி கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால், வீடுகளில் முடங்கியும், செபோனில் வீணாக பொழுதை கழித்து வந்தவேளையில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ்காரர் அளித்துவரும் இலவச சிலம்ப பயிற்சி அறிவிப்பால், உற்சாகமடைந்து, முதல் ஆளாக இப்பயிற்சியில் சேர்ந்து கொண்டேன. எனது நண்பர்களுக்கு இதுகுறித்த தெரியபடுத்தி, பங்கேற்க செய்தேன்.
200-க்கும் மேற்பட்டோர்
சிலம்பத்தில் நுணுக்கமான வித்தைகளை கற்று வருகிறேன். தொழில்முறையாக சிலம்ப பயிற்சி இல்லாததால், ஆர்வம் உள்ள மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சியில் பங்கேற்று வருகிறார்கள். 3 மாதம் மாலையில் மட்டும் 2 மணி நேரம் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி இந்த பயிற்சியில் பங்கேற்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story