சிவகங்கை அருகே பட்டப்பகலில் பயங்கரம்: நடுரோட்டில் 17 வயது வாலிபர் படுகொலை நண்பருக்கும் வெட்டு; 3 பேர் கைது


சிவகங்கை அருகே பட்டப்பகலில் பயங்கரம்:   நடுரோட்டில் 17 வயது வாலிபர் படுகொலை   நண்பருக்கும் வெட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2020 9:57 AM IST (Updated: 27 May 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

பட்டப்பகலில் நடுரோட்டில் 17 வயது வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற குட்டை சங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கும் ஏற்கனவே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சங்கரின் உறவினரான ராஜேசும் (வயது 17), அவருடைய நண்பர் சுதந்திரராஜனும் (17) கீழவாணியங்குடி சாலை பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை விரட்டினர்.

இதைக்கண்டதும் ராஜேஷ் மற்றும் சுதந்திரராஜன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினர். அவர்களை அந்த கும்பல் விடாமல் துரத்தியது.

படுகொலை

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ராஜேஷ் உள்பட 2 பேரையும் சுற்றி வளைத்து, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுதந்திரராஜன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி நடந்த இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த சுதந்திரராஜன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை சூப்பிரண்டு அப்துல்கபூர், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராஜேஷ் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

3 பேர் கைது

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருதரப்பினர் வீடும் அருகருகே இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த கொலை குறித்து சேகரின் மகன்களான தயாநிதி (வயது25), தம்பித்துரை (20), பாண்டித்துரை (19) மற்றும் வெற்றிவேல், மருதுபாண்டி, சரவணன், தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கூடுதல் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் கூறுகையில், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அண்ணன்-தம்பிகளான தயாநிதி, தம்பித்துரை, பாண்டித்துரை ஆகிய 3 பேரை சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை தேடி வருகிறோம்” என்றார்.

Next Story