பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் செவிலியர்கள்
தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வு நடத்தப்பட்டு, 10 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 700 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டதோடு, 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் செவிலியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் பணியாற்றுவது என்று தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியாற்றி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவி கலாமுருகேசன் தலைமையிலான செவிலியர்கள் நேற்று முன்தினம் முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இதில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் ஆகியவற்றில் பணியாற்றும் 286 செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story