புதிய மின்சார சட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிய மின்சார சட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 10:41 AM IST (Updated: 27 May 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதிய மின்சார சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இலவச மின்சார வினியோகம் ரத்தாகி, விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எனவே, மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தை கண்டித்தும், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மணிக்கூண்டு பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், விவசாயத்துக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அதேபோல் நாகல்நகர் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிராமலிங்கம் உள்பட 4 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் நத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மின்சார வாரிய அலுவலகம், ஒன்றிய அலுவலகம் ஆகியவை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டார தலைவர்கள் பழனியப்பன், பில்லான், நகர தலைவர் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு வட்டார தலைவர் கோகுல்நாத் தலைமையிலும், வத்தலக்குண்டுவில் தமிழக மகளிரணி மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானல்

கொடைக்கானல் தலைமை தபால் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story