புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி பேட்டி
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல் பாடுகள் குறித்து மண்டல இணைபதிவாளர் எம்.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல் பாடுகள் குறித்து மண்டல இணைபதிவாளர் எம்.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விலையில்லா பொருட்கள்
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கம் பற்றி அறியாத தொடக்கத்தில் இருந்தே பாதுகாப்பு மண்டலமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரின் வழிகாட்டுதலின் படியும், அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஒரு குழுவாக செயல்படும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியின் அறிவுறுத்தல்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.1,000 மற்றும் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4 லட்சத்து 34 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மற்றும் பொருட்கள் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அலுமினியத்தால் ஆன ‘ப’வடிவ குழாய் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
பசுமை காய்கறி கடைகள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரூ.1,000 நிவாரணம் வினியோகம் செய்யப்பட்டன. 37 நடமாடும் பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ரூ.500-க்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மொத்தம் 18,405 பைகள் ரூ.92 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5 கோடியே 37 லட்சம் அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பழங்களை சாப்பிட வேண்டும். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால், இளநீர், மோர் போன்றவை அருந்தலாம். மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். சுக்கு, திப்பிலி உள்ளிட்ட மூலிகைகள் கலந்த கபசுர குடிநீர் அருந்தலாம்.
வீடுகளில் தெர்மா மீட்டர், நாடித்துடிப்பு பிராணவாயு அளவிடும் கருவி, கையுறை, கிருமிநாசினி போன்ற பொருட்கள் அடங்கிய மருத்துவ பெட்டியை வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு எம்.உமாமகேஸ்வரி கூறினார்.
Related Tags :
Next Story