கள்ளக்காதல் விவகாரம்: அரசு செவிலியர் மீது சரமாரி தாக்குதல் கணவர்-மகன்கள் கைது


கள்ளக்காதல் விவகாரம்: அரசு செவிலியர் மீது சரமாரி தாக்குதல் கணவர்-மகன்கள் கைது
x
தினத்தந்தி 27 May 2020 6:32 AM GMT (Updated: 27 May 2020 6:32 AM GMT)

பெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அரசு செவிலியர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர்-2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அரசு செவிலியர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர்-2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, மேலப்பாளையம் அருகே உள்ள மணப்பறவையை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவரது மனைவி ஜெயா(36). இவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெயா, திருவாரூர் மாவட்டம் திருவடஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து பணிமாறுதலாகி பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே, ஜெயாவிற்கும் 108 ஆம்புலன்சில் வேலைபார்க்கும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த கண்ணன் மற்றும் அவரது இரு மகன்கள் நேற்று ரெங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ஜெயாவிடம், கள்ளக்காதலை விட்டுவிடுமாறு அறிவுரை கூறினர். அப்போது ஜெயாவிற்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

3 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது 2 மகன்களும் சேர்ந்து ஜெயாவை இரும்பு நாற்காலி மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் ஜெயாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து ஜெயாவை தாக்கிய 3 பேரையும் தாக்கி ஒரு அறைக்குள் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செவிலியர் ஜெயாவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செவிலியர் ஜெயாவை தாக்கிய கணவர் கண்ணன் மற்றும் மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story