உடுமலை துணை மையத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 336 ஆசிரியர்கள்
உடுமலையில் அமைக்கப்பட்ட துணை மையத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 336 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
உடுமலை,
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் தாராபுரம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வந்தன. உடுமலையை சேர்ந்த ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தாராபுரம் மையத்திற்கு சென்று வர வேண்டியிருந்தது. உடுமலையில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் வசதிக்காக உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை பழனி சாலையில் உள்ள ஆர்.ஜி.எம்.பள்ளியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான துணை மையம் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 42 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு அறைக்கு 8 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். 42 அறைகளிலும் சேர்த்து மொத்தம் 336 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
பணி தொடங்கியது
இதற்காக தாராபுரம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்து உடுமலையில் திருத்துவதற்கான விடைத்தாள்கள், விடைத்தாள் திருத்தும் துணை மையமான உடுமலை ஆர்.ஜி.எம். பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று காலை தொடங்கியது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.
விடைத்தாள் திருத்தும் இந்த துணை மையத்திற்கு முதல் நாளான நேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் முதன்மை தேர்வாளர்கள் 42 பேர், கூர்ந்தாய்வாளர்கள் 42 பேர் என மொத்தம் 84 பேர் ஈடுபட்டனர். அவர்கள் முதலில் கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவினர். அடுத்து சமூக இடைவெளி விட்டு வரிசையாக வந்தனர். அவர்களது கைகளில் சானிடைசர் வழங்கப்பட்டது. அதன்பிறகே அவர்கள் விடைத்தாள் திருத்தும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஒரு அறைக்கு 2 பேர் வீதம் சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் விடைத்தாள் திருத்தும் துணை மைய பொறுப்பாளர் பரிமளா மேற்பார்வையில் நடந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஒரு அறைக்கு 8 பேர் வீதம் மொத்தம் 336 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story