திருப்பூரில் இருந்து ஒடிசா, பீகாருக்கு சிறப்பு ரெயில்களில் 3,200 தொழிலாளர்கள் பயணம்


திருப்பூரில் இருந்து ஒடிசா, பீகாருக்கு  சிறப்பு ரெயில்களில் 3,200 தொழிலாளர்கள் பயணம்
x
தினத்தந்தி 28 May 2020 4:20 AM IST (Updated: 28 May 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இருந்து ஒடிசா, பீகாருக்கு 2 சிறப்பு ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 200 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

திருப்பூர், 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 6 லட்சம் பேர். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர். கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

மத்திய அரசு உத்தரவு

மேலும், பலர் உணவு கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வந்தார்கள். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள்.

3,200 பேர் சொந்த ஊர்களுக்கு...

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று ஒடிசா மாநிலம் பலாங்கீர் வரை, பீகார் மாநிலம் முஜாப்பூர்நகர் வரை 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் ஒரு ரெயிலில் 1,600 பேர் என 2 ரெயில்களில் மொத்தம் 3,200 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

முன்னதாக இதில் பயணம் செய்ய வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளும் வழங்கப்பட்டது. பதிவு எண் படி ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த இடங்களில் அமரவைத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஒடிசா ரெயில் மதியம் 12.40- மணிக்கும், பீகார் ரெயில் மாலை 3.30 மணிக்கும் புறப்பட்டு சென்றன.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) திருப்பூரில் இருந்து அசாம் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு என 2 ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story