பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது கலெக்டர் ஆய்வு


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 May 2020 4:36 AM IST (Updated: 28 May 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான 2 லட்சத்து 13 ஆயிரத்து 998 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கே.செட்டிப்பாளையம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காங்கேயம் ரோடு செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தி பிரண்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.ஜி.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 13 ஆயிரத்து 998 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்த பணியில் 200 முதன்மை தேர்வர்கள், 200 கூர்ந்தாய்வாளர்கள், 1,200 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், 87 அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருமிநாசினி

விடைத்தாள் திருத்தும் பணியில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களை விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு அழைத்து வருவதற்காக 16 வழித்தடங்களில் 21 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு 441 ஆசிரியர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து திருப்பூருக்கு வந்து செல்லும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேவையான கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் ஒரு வகுப்பறையில் ஒரு முதன்மை தேர்வர், ஒரு கூர்ந்தாய்வாளர், 6 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 3 முககவசம் வழங்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடைத்தாள் திருத்தும் மையங்களில் உள்ள அனைத்து அறைகளும் காலை, மாலை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். தளவாடப்பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படும். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இந்த மையங்களில் 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டதும், பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.

வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுமுறையின்படி தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி எதுவும் இல்லை. இருப்பினும் அவ்வாறு கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையங்கள் வந்தாலும் அதற்கு பதிலாக மாற்று தேர்வு மையம் 15 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்குமார், தெற்கு தாசில்தார் சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story