கோவையில் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னல்கள் அடுத்த மாதம் முதல் செயல்படும் போலீஸ் துணை கமிஷனர் தகவல்
கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் அடுத்த மாதம் முதல் செயல்படும் என்று துணை கமிஷனர் கூறினார்.
கோவை,
கோவை மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படுகின்றன. தற்போது கொரோனா தொற்று காரணமாக சில சிக்னல்கள் செயல்படுவதில்லை. முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்கள் மட்டும் செயல்படுகின்றன. இந்த நிலையில் 12 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறியதாவது:-
கோவையில் போக்குவரத்து சிக்னல்களின் தேவையை கருத்தில் கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அமைப்பின் சார்பில் பால் கம்பெனி சந்திப்பு, சிவாலாயா தியேட்டர் சந்திப்பு, குறிச்சி குளம் பிரிவு, குனியமுத்தூர், கிருஷ்ணா கல்லூரி சந்திப்பு, பார்க் கேட் சந்திப்பு, பெர்க்ஸ் பள்ளி சந்திப்பு, கோல்டு வின்ஸ், தொட்டிப்பாளையம் பிரிவு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி சோதனை சாவடி, சரவணம்பட்டி-துடியலூர் சந்திப்பு ஆகிய 12 இடங்களில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டன.
அடுத்த மாதம் முதல் செயல்படும்
இந்த புதிய சிக்னல்களுக்கு மின்சார சப்ளை இதுவரை இல்லை. இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் மின்சார வாரியத்துறை அதிகாரிகளுடன் பேசினார்கள். இதில் புதிய சிக்னல்களுக்கு மின்சார சப்ளை கொடுப்பதாக மின்சார வாரிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டதால் 12 புதிய சிக்னல்களும் அடுத்த மாதம்(ஜூன்) செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக அமைக்க முடிவு
இதற்கிடையில் கோவை மாநகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட 51 சிக்னல்கள் பழமையாகி விட்டதால் அவற்றை சீரமைக்க கோவை மாநகர போலீஸ் நிர்வாகம் கடந்த நவம்பர் மாதம் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் ரூ. 4 கோடியே 82 லட்சம் செலவில் அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு போக்குவரத்து சிக்னல்களுக்கான மின்சார கட்டணம் செலுத்துதல் மற்றும் பராமரிப்பு செலவுகளை தனியார் நிறுவனத்தினர் ஏற்றிருந்தனர். ஆனால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் தனியார் நிறுவனத்தினர் போக்குவரத்து சிக்னலை பராமரிப்பதிலிருந்து விலகிக் கொண்டனர். இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கோவை மாநகராட்சி தான் அவற்றை பராமரித்து வருகிறது. இந்த நிலையில் பழைய சிக்னல்களை பராமரிப்பதற்கு செலவு செய்வதை விட எல்.இ.டி. பல்புகளுடன் கூடிய சிக்னல்களை புதிதாக அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் விரைவில் புதிதாக மாற்றப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story