நாகமங்களா அருகே டிராக்டர் மீது கார் மோதல்; கன்னட சின்னத்திரை நடிகை பலி - நண்பர்கள் 2 பேர் படுகாயம்


நாகமங்களா அருகே டிராக்டர் மீது கார் மோதல்; கன்னட சின்னத்திரை நடிகை பலி - நண்பர்கள் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 May 2020 5:02 AM IST (Updated: 28 May 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

நாகமங்களா அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் கன்னட சின்னத்திரை நடிகை பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மண்டியா,

மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா தேவிஹள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்-75-ல் நேற்று முன்தினம் மாலை ஒரு டிராக்டர் ஒரு வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த கார், டிராக்டரின் தொட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் கார் மோதிய வேகத்தில் டிராக்டரின் தொட்டி கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் இளம்பெண் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவருடன் வந்த நண்பர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரை நடிகை

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பெல்லூர் போலீசார் விரைந்து சென்று, விபத்தில் பலியான இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானது கன்னட சின்னத்திரை நடிகையும், மாடல் அழகியுமான மெபினா மைக்கேல் (வயது 22) என்பதும், இவரது சொந்த ஊர் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் பெங்களூருவில் இருந்து மண்டியா வழியாக 2 நண்பர்களுடன் அவர் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக பெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரும் சோகம்

பலியான மெபினா மைக்கேல் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோ-4வது சீசனில் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கார் விபத்தில் சின்னத்திரை நடிகை பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story