புதுவையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 15-ந்தேதி தொடக்கம்; அமைச்சர் தகவல்


புதுவையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 15-ந்தேதி தொடக்கம்; அமைச்சர்  தகவல்
x
தினத்தந்தி 28 May 2020 12:10 AM GMT (Updated: 28 May 2020 12:10 AM GMT)

தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வரும் ஜூன் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்காக மாணவர்களுக்கு 200 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை உயர்கல்வித்துறை அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை செயலாளர் அன்பரசு, இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு காலத்தில் உயர் கல்வித்துறையில் 1,060 ஆசிரியர்கள் 35 ஆயிரம் மணி நேரம் வகுப்புகள் எடுத்து உள்ளனர். இதில் விடுபட்ட மாணவர்களுக்கு நேரடியாகவும் பாடம் நடத்தப்படும். தமிழகத்தில் அறிவித்துள்ளது போல் புதுவையிலும் வரும் ஜூன் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 200 பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை கல்லூரிகளில் மட்டுமல்லாது பள்ளிகளையும் தேர்வு மையமாக பயன்படுத்தி நடத்த உள்ளோம்.

தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். இதுதொடர்பாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. அதன்படி தேர்வுகள் நடத்தப்படும்

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

கல்வித்துறை செயலாளர் அன்பரசு கூறுகையில், ஆன்லைன் கோப்புகளை செல்போன் மூலம் பெற முடியாத மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து வகுப்புகளை கவனிக்க ஆலோசிக்கப்படுகிறது. சமூக இடைவெளி தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதால் ஷிப்டு முறையில் கல்லூரிகளை நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Next Story