சிற்றார் பகுதியில் வாழைத்தோட்டத்தை அழித்த யானை கூட்டம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை


சிற்றார் பகுதியில் வாழைத்தோட்டத்தை அழித்த யானை கூட்டம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2020 6:01 AM IST (Updated: 28 May 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

சிற்றார் பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாழைகளை அழித்தது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அருமனை, 

சிற்றார் பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாழைகளை அழித்தது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரப்பர் தோட்டம்

அருமனை அருகே சிற்றார் அணைப்பகுதியில் ஏராளமான தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதையொட்டி வனப்பகுதியும் அமைந்துள்ளன. தற்போது ரப்பர் தோட்டங்களில் முற்றிய ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிய பின்பு புதிய ரப்பர் மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த நிலங்களை முதலாளிகளிடம் இருந்து விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து வாழை, அன்னாசி போன்ற விவசாய பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள். காட்டுவிலங்குகள் அடிக் கடி விளை நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

யானை கூட்டம்

சிற்றார் ஒட்டனூர் பகுதியில் பிணந்தோடு பகுதியை சேர்ந்த டேவிட் என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிர் செய்திருந்தார். தற்போது வாழைகள் அனைத்தும் நன்கு வளர்ந்து குலைவிட்ட நிலையில் நின்றன.

நேற்று முன்தினம் சிற்றார் மலைபகுதியில் இருந்து இறங்கி வந்த யானை கூட்டம் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவை நூற்றுக்கும் மேற்பட்ட வாழைமரங்களை காலால் மிதித்தும், துதிக்கையால் பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்திவிட்டு மீண்டும் மலைப்பகுதிக்கு சென்றன. நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்ற விவசாயி வாழை மரங்கள் அழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், அவருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

யானையால் அழிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story