கோவையில் 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
கோவையில் 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
கோவை,
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி, 24-ந் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.
கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்தது. ஆனால் கொரோனாவுக்கு மத்தியில் எப்படி? பணி செய்வது என்று ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை திட்டமிட்டபடி தொடங்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கிருமி நாசினி
திட்டமிட்டப்படி கோவை மாவட்டத்தில் நேற்று 11 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. நேற்று நடந்த பணியில் மொத்தம் 676 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். முன்னதாக விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு செல்லும் முன் ஆசிரியர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் மையங்களுக்கு வந்தனர். அப்போது அவர்களின் கைகளில் கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட்டது.
இந்த பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா பார்வையிட்டார். தொடர்ந்து இன்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.
Related Tags :
Next Story