கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் மலைக்காய்கறிகள் கொள்முதல் விலை வீழ்ச்சி நீலகிரி விவசாயிகள் பாதிப்பு


கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில்  மலைக்காய்கறிகள் கொள்முதல் விலை வீழ்ச்சி  நீலகிரி விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 28 May 2020 6:19 AM IST (Updated: 28 May 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் மலைக்காய்கறிகள் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதன் காரணமாக நீலகிரி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் புரூக்கோலி, சுகுனி, சல்லாரை போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை. பஸ் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்த காய்கறிகளை கால்நடைகளுக்கு உணவாக கொட்டி வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

கொள்முதல் விலை வீழ்ச்சி

இந்த நிலையில் நீலகிரியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு உள்ள மலைக்காய்கறிகளை அறுவடை செய்து கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் கொண்டு செல்ல தொடங்கி இருக்கின்றனர். இருப்பினும், கேரளா மாநிலத்துக்கு அதிகளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படாததால் காய்கறி மண்டிகளில் மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பாதியாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் நீலகிரி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நஷ்டம்

இதுகுறித்து காவிலோரையை சேர்ந்த விவசாயி ஆனந்த் கூறியதாவது:-

தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கிகளில் இருந்து கடன் பெற்று, காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். காய்கறிகளின் கொள்முதல் விலை நிரந்தரமாக இல்லாததால் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது தொடர் கதையாகிறது. சில நாட்களுக்கு முன்பு நல்ல தரமான பீன்ஸ் கிலோ ரூ.60, பீட்ரூட் கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பீன்ஸ் ரூ.100, பீட்ரூட் ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பிறமாநிலங்களுக்கு காய்கறிகளை கொண்டு செல்வது எளிதானால் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story