கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை; மரங்கள் முறிந்து விழுந்தன


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை; மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 28 May 2020 6:44 AM IST (Updated: 28 May 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பரவலாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, பர்கூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேருடன் சாயந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன.

மேலும் பல இடங்களில் கடைகள் முன்பு இருந்த பெயர் பலகைகள் காற்றில் சேதமடைந்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பர்கூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தனிந்து, இரவு குளிர்காற்று வீச தொடங்கியது.

மேலும் சூறைக்காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதியில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் இல்லாததால் நகரம் இருளில் மூழ்கின. நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி பகுதியில் அதிகபட்சமாக 16.4 மி.மீட்டரும், சூளகிரியில் 6 மி.மீட்டரும் என மொத்தம் 22.4 மி.மீ மழை பதிவாகி இருந்தது. 

Next Story