குன்னூரில் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி
குன்னூரில் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. ஆண்டுதோறும் மே மாதத்தின் இறுதி வாரம் முதல் ஜூலை மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக உள்ளது. பலா பழங்களை சுவைக்க காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் இருக்கும். காட்டுயானைகள் மரத்தில் 16 அடி உயரம் வரை உள்ள பலாப்பழங்களை பறித்து விடும்.
தற்போது பலா பழங்களை ருசிக்க 9 காட்டுயானைகள் பர்லியார், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.
கிலோ ரூ.30-க்கு விற்பனை
ஊரடங்கு உத்தரவால் பர்லியாரில் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பலாப்பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள் உள்ளனர். மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வைத்து விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வாகனங்கள் மற்றும் குன்னூர் நகராட்சி எல்லையில் சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பலாப்பழம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பலாப்பழம் கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story