அரசு பள்ளிகளை புதுப்பிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு கொரோனா ஊரடங்கில் சீரமைப்பு நடவடிக்கை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சீரமைப்பு நடவடிக்கையாக அரசு பள்ளிக்கூடங்களை புதுப்பிக்க ரூ.5 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சீரமைப்பு நடவடிக்கையாக அரசு பள்ளிக்கூடங்களை புதுப்பிக்க ரூ.5 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை, தென்காசி மாவட்டங்கள், கிராமங்கள் நிறைந்த பகுதி ஆகும். இந்த 2 மாவட்டங்களில் 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் ஏராளமான அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன. கிராமப்புற மாணவ, மாணவிகள் படிக்க பல ஊர்களில் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
1,623 பள்ளிக்கூடங்கள்
அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1,623 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்கள் ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.
ஜன்னல், கதவு, மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக பல பள்ளிக்கூடங்களில் சுகாதார வளாக வசதிகள் சரியாக இல்லை. இதை அரசு கவனத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.5 கோடியே 20 லட்சம் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளிகளை சீரமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளிக்கூடங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணி தொடங்கும். பஞ்சாயத்து யூனியன் அரசு பள்ளிக்கூடங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் மரத்தில் இருந்து இலைகள் கருகி கீழே விழுந்துள்து.
சுத்தம் செய்யும் பணி
தற்போது பணியாளர்களை கொண்டு பள்ளிக்கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. முட்செடிகள், இலைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. சாலையோர பள்ளிகளுக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாங்கள் செயல்படுவோம்.
இந்த ஆண்டு ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் பழுதுபார்க்கும் பணிக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மற்ற நிதியில் இருந்து புதிய கட்டிடங்கள் கட்டப்படும். கொரோனா விடுமுறைக்குள் அனைத்து புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது அனைத்துப்பணிகளும் நிறைவு பெறும். உள்கட்டமைப்பு வசதி மேம்படும்போது மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story