மின்சார சட்ட திருத்தத்தை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்ட திருத்தத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படலாம் என்பதால் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இலவச மின்சாரம் வழங்குவதை ரத்து செய்யக்கூடாது என்றும், மின்சார சட்ட திருத்தத்தை கண்டித்தும் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் பவுல், ஆவுளியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
28 இடங்களில்...
அப்போது மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் உதவித் தொகை, விவசாய பணிகளுக்கு தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் பழனி, தொப்பம்பட்டி, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story