தேனியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்


தேனியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 28 May 2020 8:39 AM IST (Updated: 28 May 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கின.

தேனி, 

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனிமேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் முதன்மை மதிப்பீட்டு மையமும், அருகில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் துணை மதிப்பீட்டு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கின. அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரை இந்த பணிகள் நடக்கிறது. இங்கு, பிறமாவட்டங்களில் இருந்து வரப்பெற்றுள்ள தமிழ்வழியில் தேர்வு எழுதி உள்ள 46 ஆயிரத்து 739 மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள், ஆங்கில வழியில் தேர்வு எழுதியுள்ள 52 ஆயிரத்து 392 மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது. இந்த பணிக்காக முதன்மை மதிப்பீட்டு மையத்துக்கு 62 முதன்மை தேர்வாளர்கள், 62 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 372 துணை தேர்வாளர்கள் மற்றும் துணை மதிப்பீட்டு மையத்துக்கு 40 முதன்மை தேர்வாளர்கள், 40 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 240 துணை தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமூக இடைவெளியுடன் அமர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு ஆசிரியர்கள் வந்து செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. கைகளை கழுவி, முக கவசம் அணிந்த பின்னரே மையத்துக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story