ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு: கிராமிய கலைஞர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி திருச்சியில் கிராமிய கலைஞர்கள் தப்பாட்டத்துடன் ஆர்ப் பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி திருச்சியில் கிராமிய கலைஞர்கள் தப்பாட்டத்துடன் ஆர்ப் பாட்டம் நடத்தினார்கள்.
வாழ்வாதாரம் பாதிப்பு
ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில் விழாக்கள், தேரோட்டம் உள்ளிட்ட விசேஷ விழாக்கள் ரத்து செய்யப்பட்டதுடன், கோவில்களும் காலவரை யின்றி மூடப்பட்டு விட்டன. கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பெரிய வணிக நிறுவனங்களான ஜவுளிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடைகள் இன்னமும் திறக்க அனுமதிக்கவில்லை. அதே வேளையில் ஆண்டுதோறும் கோவில் விழாக்களையே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரமும் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி இருந்து வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் தப்பாட்டம், கரகாட்டம், தாரை இசை கலைஞர்கள் தங்களது இசைக்கருவிகளுடன் திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு முக கவசங்கள் அணிந்து தப்பாட்டத்துடன், மேளம் மற்றும் நாதஸ்வரம் இசைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் ஏராளமான கிராமிய இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் கிராமிய இசைக் கலைஞர்கள் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எனவே, அரசு நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, தற்போது தான் கோவில் விழாக்கள் அதிகமாக நடைபெறும் காலம். இதில்தான் எங்களை போன்ற இசைக்கலைஞர்களுக்கு வருமானம் வரும். தற்போது திருவிழாக்கள் நடை பெறாததால் நாங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம். எனவே, அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்கள். முடிவில் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துசென்றனர்.
Related Tags :
Next Story