கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 May 2020 4:17 AM GMT (Updated: 28 May 2020 4:17 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளிமாநிலங்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 153 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலம் மற்றும் சென்னையில் வேலை பார்த்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 1309 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதுபற்றி அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், 1309 பேரையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைத்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து உமிழ்நீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் வந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது நேற்று முன்தினம் வரை 153 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று ஒரே நாளில் மராட்டியத்தில் இருந்து வந்த 73 பேர் மற்றும் கோயம்பேட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு என 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கண்டறிந்த சுகாதாரத்துறையினர் அவர்கள் வசிக்கும் பகுதியை தடுப்புக்கட்டை அமைத்து சீல் வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடங்க மறுக்கும் இந்த கொரோனாவால் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Next Story