11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதிவரை நடந்து முடிந்தது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை 14,482 மாணவர்கள், 17,823 மாணவிகள் என மொத்தம் 32,305 பேர் எழுதி இருந்தனர். தேர்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளின் விடைத்தாள் கட்டுகள் 11 பள்ளி மையங்களில் தலா ஒரு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றிற்கு தொடர்ச்சியாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே கொரோனா அச்சம் காரணமாகவும், போக்குவரத்து குளறுபடி காரணமாகவும் மார்ச் 24-ந் தேதி 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதாத மாணவ- மாணவிகளுக்கு மட்டும் ஜூன் 18-ந் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தில் நேற்று தொடங்கியது. அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியினை ஆசிரியர், ஆசிரியைகள் மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி முன்னிலையில் விடைத்தாள்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டு திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி மாநகரில் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களிலும், புறநகர் பகுதியில் முசிறி, மணப்பாறை மற்றும் மண்ணச்சநல்லூர் என 4 பள்ளி மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 2,160 ஆசிரியர், ஆசிரியைகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தாக்கம் இன்னமும் குறையாத காரணத்தால் ஒரு அறையில் 8 ஆசிரியர்கள் வீதம் அமர்ந்து விடைத்தாள்களை திருத்தினார்கள்.
வாகன போக்குவரத்து
மேலும் ஆசிரியர், ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதற்கும், பின்னர் திரும்ப செல்வதற்கும் வாகன போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த விடைத்தாள் திருத்தும் பணி, ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, ஜூன் 8-ந் தேதிவரை நடக்கிறது.
Related Tags :
Next Story