சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாத்தூர் தாலுகா செயலாளர் மனோஜ்குமார் தலைமையில், தாலுகா தலைவர் சுப்பாராஜ் முன்னிலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட பணிகளை விவசாய பணிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். நீதிமன்றம் கூறியபடி சிறு,குறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை 3 மாத கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையிலும், தேவதானத்தில் அய்யனன் தலைமையிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கவும், விவசாயிகளுக்கு கொரோனா நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கூறப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் லிங்கம், வக்கீல் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கிருஷ்ணன் கோவிலில் இயங்கிக் கொண்டிருக்கும் வேளாண்மைத்துறை அலுவலகத்தை உடனடியாக வத்திராயிருப்பில் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, வத்திராயிருப்பு தாலுகா பொறுப்பு செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச் செயலாளர் மகாலிங்கம், அனுப்பன்குளம் கண்மாய் செயலாளர் பாண்டி, வில்வராயன் கண்மாய் செயலாளர் சுந்தரமகாலிங்கம், பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
விருதுநகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு விருதுநகர் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா செயலாளர் சக்கணன், நகர செயலாளர் காதர்மெய்தீன், முத்துக்குமார், ஈஸ்வரன் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஜயமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினரும் மாவட்ட பொருளாளருமான ஜோதிலட்சுமி கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் சிங்காரவேல், அங்கம்மாள், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story