தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,600 டன் அரிசி ஈரோட்டுக்கு வந்தது


தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,600 டன் அரிசி ஈரோட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 28 May 2020 6:26 AM GMT (Updated: 28 May 2020 6:26 AM GMT)

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,600 டன் அரிசி ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஈரோடு,

பொது வினியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

இந்த நிலையில் பொது வினியோக திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான புழுங்கல் அரிசியை தெலுங்கானா மாநிலத்தில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு முதல் கட்டமாக 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோட் டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 42 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரத்து 600 டன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட அரிசி ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு புழுங்கல் அரிசி எடுத்துச்செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story