பல்லடம் அருகே மின்கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க கோரிக்கை
பல்லடம் அருகே உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பல்லடம்,
மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் புகளூரிலிருந்து அரசூர் வரை செல்லும் மின்பாதை திட்டம் பல்லடம் தாலுகா சுக்கம்பாளையம் கிராமம் வழியாக செயல்படுத்தபடவுள்ளது. இந்த மின்கோபுரம் அமைக்கப்பட உள்ள விளை நிலத்திற்கு இழப்பீட்டு தொகை அதிகப்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தநிலையில் பவர்கிரிட் நிறுவனத்தினர், மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று அந்த உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் இடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் குழி எடுக்கும் பணியில் ஈடுபட வந்தனர்.
அவர்களைத் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது உயர் மின்கோபுரம் அமைக்கும் போது விளை நிலத்திற்கு செல்ல வழிவிட்டு அமைக்க வேண்டும்என்றனர். இது பற்றி தகவலறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல், பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கண்ணன், ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.நிலம் அளவீடு செய்வது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி பின்னர் பணிகளை தொடர முடிவு செய்யப்பட்டது.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகசுந்தரம், மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயித்து அதன்படி பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கொடுத்த பின்னரே திட்டப்பணிகள் தொடர வேண்டும். இதை வலியுறுத்தி கலெக்டரின் கவனத்தை ஈர்க்கும்வகையில் வரும் வாரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
மின்சார திருத்த சட்டம்
இந்திய மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்து அந்த திருத்தங்களின் மீதான கருத்தை மாநில அரசுகள் பதிவு செய்வதற்காக வருகிற 2-ந் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள், ஏழைகள், கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கும், வீட்டு மின்நுகர்வோருக்கும் தமிழக அரசு மானியம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.
விவசாயிகளை மிகக்கடுமையாக பாதிக்கும் இந்த மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவதற்கு தற்போது ஒரு குதிரை திறனுக்கு ரூ.20 ஆயிரம் என்ற வீதத்தில் பெறப்படும் வைப்புத்தொகையை முற்றிலுமாக ரத்து செய்தும், கட்டணமில்லாமல் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story