தொழிலாளர்கள் வருவதற்கு வசதியாக கோவைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் தொழில்துறையினர் கோரிக்கை


தொழிலாளர்கள் வருவதற்கு வசதியாக கோவைக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் தொழில்துறையினர் கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2020 4:56 AM IST (Updated: 29 May 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் கோவை வர வசதியாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என கோவை தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 31 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் 40 ஆயிரம் தொழிலாளர்கள் கோவையை விட்டு வெளியேறி விட்டனர். இதன்காரணமாக தொழில் நகரமான கோவை தொழிலாளர்கள் இன்றி தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தொழில்களும் முடங்குவதோடு, உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

தென் மாவட்ட தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து கோவையில் உள்ள தொழில்நிறுவனங்கள், பவுண்டரிகளில் வேலை செய்ய வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கோவை வர தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் கோவை வர பஸ், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இல்லை.

எனவே தென் மாவட்ட தொழிலாளர்கள் கோவை வர வசதியாக பஸ் இயக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக கோவையில் உள்ள சிறு, குறு தொழில்களின் ஒன்றுபட்ட அமைப்பான கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

தமிழக அரசின் அனுமதியின் படி கோவையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கோவைக்கு பணிக்கு வர தயாராக உள்ளனர். ஆனால் போதிய பஸ் வசதி இல்லாததால் அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இ-பாஸ் பெற்று கோவைக்கு தொழிலாளர்களை தனி வாகனத்தில் அழைத்து வர எங்களிடம் போதிய பொருளாதார வசதிகள் இல்லை. ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கும் வருவாய் இழப்பு உள்ளது. எனவே வெளி மாவட்டங்களில் உள்ள எங்களது தொழிலாளர்கள் கோவை திரும்ப வசதியாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story