விவசாயிகளின் ஆலோசனை படி குடிமராமத்து பணிகள் அதிகாரி தகவல்


விவசாயிகளின் ஆலோசனை படி குடிமராமத்து பணிகள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 29 May 2020 5:32 AM IST (Updated: 29 May 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் ஆலோசனை படி குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக நீர்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சத்தியகோபால் கூறினார்.

நீடாமங்கலம், 

விவசாயிகளின் ஆலோசனை படி குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக நீர்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சத்தியகோபால் கூறினார்.

கொண்டியாறு வாய்க்கால்

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடு கிராமத்தில் கொண்டியாறு வாய்க்காலின் குறுக்கே கடைமடை நீரொழுங்கி மறு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதை நீர்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சத்தியகோபால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது-

உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகளுக்கு எந்தவித தொகையையும் குறைக்காமல் ஒதுக்கீடு செய்துள்ளார்.

குடிமராமத்து பணிகள்

நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து பணிகள் யாவும் பாசனதாரர்கள் சங்கங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் 95 பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்றுள்ள குடிமராமத்து பணிகள் மூலமாக 30 ஆயிரத்து 957 எக்டேர் பாசன வசதி பெறும்.

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் எந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும் என கணக்கிடப்பட்டு குறுகிய காலத்தில் பணிகளை தரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிமராமத்து பணிகள் அனைத்தும் விவசாயிகளின் நேரடி பார்வையில், அவர்களுடைய ஆலோசனைபடி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், செயற்பொறியாளர் தமிழச்செல்வம், உதவி பொறியாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story