1,500 தொழிலாளர்கள் ரெயிலில் ஒடிசாவுக்கு புறப்பட்டனர்


1,500 தொழிலாளர்கள் ரெயிலில் ஒடிசாவுக்கு புறப்பட்டனர்
x
தினத்தந்தி 29 May 2020 12:15 AM GMT (Updated: 29 May 2020 12:15 AM GMT)

புதுச்சேரி, காரைக்காலில் இருந்து ரெயில் மூலம் 1,500 தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு பஸ், சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் தங்கி தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த 1,450 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் கடந்த 16-ந் தேதி பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் புதுவையில் வசிக்கும் சுமார் 7,000 வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விண்ணப்பித்தனர். இந்த நிலையில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல காரைக்காலில் இருந்து புதுச்சேரி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் செல்ல 1,547 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நேற்று ஒடிசாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த 186 தொழிலாளர்களும், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 286 தொழிலாளர்களும் நேற்று மாலை காரைக்காலில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவுக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. காரைக்கால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயிலை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக புதுவையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் அரசு பஸ்கள் மூலம் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்துக்கு நேற்று மதியம் அழைத்து வரப்பட்டனர். அங்கு மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன.

ரெயில் வர வெகுநேரம் இருந்ததால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தொழிலாளர்களின் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான சில கேள்விகளை கேட்டு அதற்கு பதிலளித்த குழந்தைகளை பாராட்டினார். மேலும் குழந்தைகளை பாட்டுப்பாடச் சொல்லியும், கதைகளை சொல்லுமாறும் உற்சாகப்படுத்தினார். இதனால் மைதானத்தில் காத்திருந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

புதுவை ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் வந்தவுடன் உப்பளம் மைதானத்தில் இருந்தவர்களை பஸ்கள் மூலமாக ரெயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் நள்ளிரவில் அவர்கள் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story