ஏழைகள் மீது கரிசனம் காட்ட வேண்டும்; பிரதமருக்கு, நாராயணசாமி கோரிக்கை


ஏழைகள் மீது கரிசனம் காட்ட வேண்டும்; பிரதமருக்கு, நாராயணசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2020 6:10 AM IST (Updated: 29 May 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகள் மீது கரிசனம் காட்ட வேண்டும் என்று பிரதமருக்கு நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கினால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழந்தவர்களின் வங்கி கணக்கில் இந்த மாதம் ரூ.10 ஆயிரம் போடவும், அடுத்த 5 மாதங்களுக்கு தலா ரூ.7,500 போடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இந்த பணத்தை பயன்படுத்தி நுகர்வு செய்யும் போது நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே அந்நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் அங்கு பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும். ரெயில், பஸ் போன்ற போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும். ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் கிடைக்கவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விஷயத்தில் பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகள் மீது பிரதமர் மோடி கரிசனம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story