குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம் 1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்


குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம் 1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 29 May 2020 6:31 AM IST (Updated: 29 May 2020 6:31 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், 

குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

4 மையங்களில்...

தமிழகம் முழுவதும் (சென்னையை தவிர்த்து) பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்துவதற்காக நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் பள்ளி, படந்தாலுமூடு திருஇருதய மேல்நிலைப்பள்ளி, திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல் நாளான நேற்று முன்தினம் 162 முதன்மை தேர்வர், 162 கூர்ந்தாய்வு அலுவலர்களும் டதி பள்ளியை தவிர்த்து மற்ற 3 மையங்களிலும் விடைத்தாள்களை திருத்தினர். 2-வது நாளான நேற்று 4 மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது.

1,276 ஆசிரியர்கள்

நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 272 பேரும், ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மையத்தில் 364 பேரும், திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 368 பேரும், படந்தாலுமூடு திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் 272 பேரும் என மொத்தம் 1,276 ஆசிரிய, ஆசிரியைகள், முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையத்துக்கு வந்த ஆசிரியர்கள் அனைவரும் உடல் வெப்பநிலையை சரிபார்த்து தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு மையத்திலும் மருத்துவக்குழுவினர் நுழைவு வாயில் பகுதியில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். இதுதவிர ஆசிரியர்களுக்காக கை கழுவும் திரவம், தண்ணீர் வசதிகளும் வைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் அறைகளில் ஆசிரிய, ஆசிரியைகள் முகக்கவசம் அணிந்து விடைத்தாள்களை திருத்தினர்.

ஒவ்வொரு அறையிலும் கை சுத்தம் செய்யும் திரவமும் வழங்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வகுப்பறையிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் 6 முதல் 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 4 மையங்களுக்கும், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மையங்களுக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் சென்று வர வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், குமரி மாவட்டத்தின் கருங்கல், குளச்சல், தூத்தூர், கொல்லங்கோடு, பளுகல், அருமனை, கடையாலுமூடு, குலசேகரம், சித்திரங்கோடு, தடிக்காரன்கோணம், தாழக்குடி, ராஜாவூர், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, மணக்குடி, பள்ளம், மணவாளக்குறிச்சி, முட்டம், கடியப்பட்டணம் போன்ற பகுதிகளில் இருந்து 4 மையங்களுக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் சென்று வர வசதியாக 29 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு நாகர்கோவில் வடசேரி உழவர்சந்தை பகுதியில் இருந்து 2 அரசு பஸ்களும், கன்னியாகுமரியில் இருந்து அஞ்சுகிராமம், காவல்கிணறு வழியாக ஒரு அரசு பஸ்சும் என மொத்தம் 3 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் குமரி மாவட்ட பகுதிகளில் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் சிலவற்றில் 3 பேர், 4 பேர் என பயணம் செய்ததால் சில பஸ்களை குறைக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story