கூடலூரில் தடுப்பணைகளை சீரமைக்கும் பணி மும்முரம்


கூடலூரில் தடுப்பணைகளை சீரமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 29 May 2020 6:55 AM IST (Updated: 29 May 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தடுப்பணைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,

கூடலூர் நகரில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாண்டியாறு, தொரப்பள்ளி ஆறுகளில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் பல்மாடி, ஆத்தூர், 27-வது மைல் உள்பட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கூடலூரில் பலத்த மழை பெய்தது. அப்போது அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தடுப்பணைகளில் சேறும், சகதியும் நிறைந்தது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகளில் சேறும், சகதியும் நிறைவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் போதியளவு தண்ணீரை தேக்கி வைக்க முடிவது இல்லை. இதன் காரணமாக கூடலூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதன்பின்னர் ஆறுகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் முன்கூட்டியே தடுப்பணைகளை சீரமைக்கும் பணியில் கூடலூர் நகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அதன்படி பல்மாடி, ஆத்தூர், 27-வது மைல் பகுதியில் உள்ள தடுப்பணைகளில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையில் பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தடுப்பணைகளில் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும், சுவர்கள் மற்றும் குழாய்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும், அதிகளவு தண்ணீரை தேக்கும் வகையில் ஆழப்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

சீரமைப்பு பணி

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கூடலூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தடுப்பணைகளில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் சேறும், சகதியும் அதிகளவில் நிறைந்தது. மழைக்காலம் முடிந்த உடன் சீரமைப்பு பணி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் நகராட்சி பகுதியில் சுகாதார பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடை மழை கைகொடுத்தால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படவில்லை. இருப்பினும் அடுத்த சில வாரங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளதால், தடுப்பணைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அதிகளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதேபோல் நகருக்குள் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வது, குடிநீர் கிணறுகளை தூர்வாருவது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story