திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி


திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை  பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 29 May 2020 8:19 AM IST (Updated: 29 May 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன்பின்னர் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் மக்கள் தினமும் வியர்வையில் குளித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் கூட, வெயிலை சமாளிக்க முடியாமல் மதியத்துக்கு பின்னர் வீட்டுக்குள் முடங்கினர்.

இந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்றது. எனினும் திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 6 மணிக்கு பலத்த காற்றுடன் மழை கொட்டியது. திண்டுக்கல் நகரை பொறுத்தமட்டில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னர் இரவில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் நாளில் மழை பெய்ததோடு, இரவில் இதமான குளிர் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பலத்த காற்று வீசியதால் திண்டுக்கல் நகரில் ஒருசில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பழனி-கொடைக்கானல்

இதேபோல் பழனி, கொடைக் கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பழனியில் மழையின் போது சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருவள்ளுவர் சாலையில் மரக்கிளை முறிந்து மின்கம்பியில் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து சீரமைத்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை பொழுதில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்தநிலையில் நேற்றும் கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இடி-மின்னல் காரணமாக நகரில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் நகரின் சில பகுதிகள் இருளில் மூழ்கின.

Next Story