மதுரையில் போலீசார், கைதிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா


மதுரையில் போலீசார், கைதிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 May 2020 10:12 AM IST (Updated: 29 May 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போலீசார், கைதிகள் உள்பட 11 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை,

மதுரையில் நேற்று 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் பெங்களூரு, டெல்லி, அரியானா ஆகிய பகுதிகளில் இருந்து மதுரைக்கு விமானங்களில் வந்தவர்கள். மற்றவர்களில் 2 பேர் மதுரை மத்திய சிறையில் கைதிகளாக இருக்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் சென்னைக்கு சென்று திரும்பிய நிலையில் அவர்களுடன் பயணித்த மற்ற மாவட்டங்களை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை சிறை சாலையில் இருந்து சென்னை சென்று திரும்பிய கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மதுரையை சேர்ந்த 43 வயது ஆண் மற்றும் 39 வயது வாலிபர் ஆகிய 2 கைதிகளுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

மற்றொருவர் மதுரை திருநகர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த 54 வயது நபர். இவர் மதுரை திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதுபோல் மானகிரி பகுதியை சேர்ந்த 36 வயது பெண். இவரும் அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

நேற்றுமுன்தினம் திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சுகாதார ஊழியர்கள்

அடுத்ததாக மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மற்றும் 35 வயது நபர். இவர்கள் இருவரும் சுகாதார ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். மற்றொருவர் மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர்.

இவர்கள் 3 பேருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நோய் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 255-ஆக உயர்ந்துள்ளது.

Next Story