கடலூர் கெடிலம் ஆற்றில் அரங்கேறும் மணல் கொள்ளை


கடலூர் கெடிலம் ஆற்றில் அரங்கேறும் மணல் கொள்ளை
x
தினத்தந்தி 29 May 2020 10:19 AM IST (Updated: 29 May 2020 10:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கெடிலம் ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு இடையே பாயும் ஒரு ஆறு தான் கெடிலம். இது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உற்பத்தியாகி திருக்கோவிலூர், அரியூர் வழியாக சேந்தநாட்டை கடந்து கடலூர் மாவட்டத்துக்குள் புகுகிறது.

பின்னர் திருவந்திபுரத்தை கடந்து கடலூர் நகரை தாண்டி வங்கக்கடலில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 112 கி.மீ. ஆகும். இது மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறாகும். இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆறு செல்லும் பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை ஜரூராக நடைபெற்று வருகிறது. ஆம், கடலூர் கம்மியம்பேட்டை, கூத்தப்பாக்கம், திருவந்திபுரம் பகுதியில் கெடிலம் ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை பற்றி காண்போம்.

திருவந்திபுரத்தில் இருந்து கடலூர் வரையுள்ள கெடிலம் ஆற்றில் ஆங்காங்கே பல அடி ஆழத்திற்கு மணல் உள்ளது. இதை கண்ட கொள்ளையர்கள், முதலில் லாரி, டிராக்டர்கள், மாட்டுவண்டிகள் மூலம் மணலை கடத்திச்சென்றனர். இது பற்றி அறிந்ததும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மணல் கடத்திச் செல்வோரை கைது செய்ததோடு, மணல் கடத்த பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின் கெடுபிடியால் கடந்த சில நாட்களாக மணல் கொள்ளை அடியோடு நிறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், மணலை கடத்த புதிய யுக்தியையும் கையாண்டுள்ளனர். ஆம், பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் நூற்றுக்கணக்கான காலி சாக்குகளுடன் கெடிலம் ஆற்றுக்கு செல்லும் கொள்ளையர்கள், அங்கு ஓரிடத்தில் அமர்ந்து சாக்கில் மணலை அள்ளுகிறார்கள்.

பின்னர் அதனை மூட்டைபோன்று கட்டி, தலையில் சுமந்து கெடிலம் ஆற்றில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தி வைக்கப்படும் டிராக்டரில் ஏற்றி பல ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி விற்பனை செய்கிறார்கள்.

கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் கம்மியம்பேட்டை குப்பை மேடு, நவநீதம் நகர் வழியாக மணல் கொள்ளை அரங்கேறுகிறது. இதை ஒரு கும்பல் தொழிலாகவே செய்கிறது. ஆம் இரவில் மணல் கடத்துவதும், பகலில் வீடுகளுக்கு சென்று மணல் மூட்டைகளை விற்பனை செய்தும் வருகிறார்கள். இவ்வாறு கடத்தி வரப்படும் மணல் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கத்தில் 25 கிலோ எடைகொண்ட ஒரு சாக்கு மூட்டை ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் கெடிலம் ஆற்றில் கனிம வளம் சுரண்டப்பட்டு, அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே இந்த மணல் கொள்ளையை தடுக்க காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story